ஜோதிடத் தொழில் ஆலோசனைகள் 1




 ஜோதிடத் தொழிலை வெற்றிகரமாக நடத்த பல அரிய ஆலோசனைகள் !! 

   ஜோதிடத்தைத் தொழிலாக மேற்கொள்ள விரும்பும் ஜோதிட நண்பர்களே  தெரிந்து கொள்ள வேண்டியவைகளையும் பின் பற்ற வேண்டிய விதிகளையும் இனி விரிவாக காண்போம்.  

 ( 1 ) மதிப்பையும் , பெருந்தன்மையையும் ஏற்படுத்தக் கூடிய தோற்றம் , நடையுடை பாவனைகள் கொண்டிருத்தல் வேண்டும் ; காலையில் எழுந்தவுடன் நன்கு குளித்து தூய ஆடைகளை உடுத்துதல் அவசியம் .

 ( 2 ) சபைக் கூச்சமின்றி கம்பீரமாகப் பேசும் திறன் வேண்டும் . இதைவிட இனிமை தவழும் முகத்துடன் சிரித்து நகைச்சுவையாகப் பேசத் தெரிந்திருப்பது சாலச் சிறந்தது .

     எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படக் கூடாது . ஜாதகம் பார்க்கவரும் சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக பேசுவர் ; ஜோதிடர் என்றால் அலட்சியமான நோக்குடன் பார்ப்பர்கள் ; நம்மைவிட அறிவாளியென்று காட்டிக் கொள்ள ஆசைப்படுவர் ; ஜோதிடத்தில் அவருக்குத் தெரிந்த அரைகுறை அறிவு நமக்குத் தெரிகிறதா என்று ஆழம் பார்ப்பர் . அடுத்த ஜோதிடரை நம்மிடமே புகழ்வர் ; அவர் மனதில் ஏதோ ஒன்று பட்டுவிட்டால் , நம்மை மட்டந்தட்ட முனைவர்கள்; இது போன்ற எப்படிப்பட்ட  சூழ் நிலையிலும் நிதானத்தை இழக்கக்கூடாது . சிடுசிடுவென்றே . கோபப்பட்டோ அவமதிப்பாகப் பேசிவிடுதல் கூடாது நயமாக உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் . உண்மையான திறமைக்கு முன் யாரும் அடிபணிந்தே தீரவேண்டும் 

. ( 3 ) ஜோதிடத் ' தொழிலில் ஈடுபடுபவர்கள் ஜோதிட சம்பந்தமான துறையில் மட்டுமின்றி பற்பல துறைகளிலும் ஏராளமான விஷயங்கள் அறிந்திருக்க வேண்டும் . 

  மனிதனுடைய மனம் , சிந்தனை , செயல் , போக்கு . நடவடிக்கைகளை கூர்ந்தறியும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும் .

   பொருளாதாரவியல் , வணிகவியல் , வானவியல் , உளவியல் , பொறியியல் , மருத்துவ இயல் மற்றும் நாட்டு நடப்புகள் அனைத்திலும் சராசரி அறிவு பெற்றிருந்தாலே ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் பல விஷயங்களைப் பற்றியும் பேசிட முடியும் . இது ஜோதிடனின் மதிப்பை  பன்மடங்கு உயர்த்தும் என்பதில் ஐயமில்லை 

    இரண்டாமாதி பத்தில் சூரியனோடு சம்பந்தப்படின் சிறந்த கண் டாக்டராக ( Eye Specialist ) விளங்கலாம் என்று கூறலாம் ; மூன்றாமாதி அப்படி சம்மந்தப்படின் சிறந்த காது டாக்டராக ( Ear Specialist ) வரலாம் என்று கூறலாம் ; ஐந்தாமாதி அப்படி இருக்கின் தனியாக பிரசவ ஆஸ்பத்திரி கட்டி தொழில் நடத்தலாம் என்று ஆலோசனை கூறலாம் ; யுரேனஸ் பத்தோடு சிறப்பான தொடர்பு பொற்றால் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பெரிய ஆளாக வரலாம் என்று ஆலோசனை கூறலாம் ; இப்படி பல விஷயங்களையும் பேசுவ தற்கு முடிந்த அளவு பல விஷயங்களையும் தெரிந்திருப்பது நல்லது.

    தவறாமல் தினசரி பேப்பர் படித்து நாட்டு நடப்புகள் முடி அறிதல் அவசியம் .

    நிறைய இலக்கியங்கள் , காவியங்கள் படித்திருந்தால் , இடையே கையாளலாம் . விசித்திரமான பாடல்கள் , கதைகள் , துணுக்குகளை இடை இடையே கையாளலாம் 

உதாரணத்திற்கு ,

' அதிகாரி வீட்டு கோழி முட்டை , குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம் ' ' '

கழுத்திலிருப்பது ருத்திராட்சம் , மடியிலிருப்பது கன்னக் கோல் " 

  '' பூலோக முதலியார் பட்டம் , புகுந்து பார்த்தால் பொட்டல் " 

‘ ‘ தன்னைப் பெற்றவள் கிண்ணிப் பிச்சையெடுக்க , தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் “

' ' தூத்துக்குடி சந்தையிலே துட்டுக்கொரு பெண்டாட்டி , சும்மா கிடைத்தால் எனக்கொருத்தி , எங்கப்ம்னுக் கொருத்தி "

 “உப்பு விற்றால் மழை பொழிகிறது . மாவு விற்றால் காற்றடிக்கிறது " 

“ ஈரூரில் உழுதவன் கெட்டான் , இரண்டு பெண் கொண்டவன் கெட்டான் . ' ' 

" சீலை இல்லை என்று சின்னாத்தாள் வீட்டுக்குப் போனா ளாம் , அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம் ' '

   போன்ற சுவையான பழமொழிகளை இடை யிடையே கையாளுதல் மிக நல்ல பலன்களையளிக்கும் .

  “காசு வாங்கி கல்லாவில் போட்டா ,அது போற இடம் தெரியாலை “

  “குறிக்கோளில்லாதவன் கெட்டன் “

   

 ( 4 ) சோதிட சம்பந்தமான நூல்கள் எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு நூல்கள் படிக்க வேண்டும் . ஒவ்வொரு நூலிலும் ஏதாவதொரு புது விஷயம் இருக்கும் ; ஏதாவ தொரு புது 

விளக்கம் கிடைக்கும்  சோதிட விஷயங்கள் அனைத்திற்கும் ஒரே நூலிலேயே யாரும் விளக்கம் அளிக்க முடியாது . கோடிப் பக்கங்கள் எழுதினால் கூட நுணுக்கங்களை ஒரு நூலில் அடக்க முடியாது . லக்னங்கள் தான் பன்னிரண்டே ஒழிய , கிரக அமைப்புகள் கோடான கோடி வகைகளில் அமையும் . புதுப்புது அமைப்புகளுக் கெல்லாம் , அனுபவத்திறன் கொண்டு கற்பனைத்திறன் கொண்டு தான் விளக்க வேண்டும் .

      ஒரு நல்ல ஜோதிடன் ஒரு தேர்ந்த விஞ்ஞானியைப் போன்றவனே ! நல்ல கூர்மையான புத்தியும் , நல்ல ஞாபக சக்தியும் , நல்ல கற்பனா வளமும் இருக்கவேண்டும் . குறிப்பாக அடிப்படை விஷயங்களில் , கிரகங்கள் , வீடுகள் , லக்னங்கள் குறிப்பனவற்றில் நல்ல மனப்பாடம் வேண்டும் . அப்போது தான் எண்ணற்ற விஷயங்களை ஆராய்ந்து கூறமுடியும் . ஜோதிடத்தின் பரப்பளவு கண்டு மலைக்கவே கூடாது . புதிதாகக் கற்றுக் கொள்பவர்களுக்கு முதலில் தான் சற்று சிரமம் தெரியும் . அனுபவம் பெற பெற அனைத்தும் எளிதாகிவிடும் .

  ( 5 ) 50 அல்லது 100 வருடங்களுக்கென்று தொகுப்புப் பஞ்சாங்கங்களாக சில வெளியீடுகள் இருக்கின்றன . அதாவது " கி . பி 1900 முதல் 2000 வரைக்கான கிரக சஞ்சாரங்கள் ' ' என்று இரண்டு மூன்று பாகங்களாக சில கம்பெனிகள் வெளியிட்டிருக்கும் .அவைகளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது . 

( 6 ) கணிதங்களை எளிதாகச் செய்வதற்கொன்று சில பட்டியல்கள்

சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் : நவாம்ச சக்கரம் போட நீங்கள் தனியாக கணிதம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை - அதற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் . ஒரே நிமிடத்தில் விடலாம் .                                                                                                                                                                                                                                                                                             சுதேச கால மணி காணவேண்டுமானால் அதற்காக நீங்கள் முழு கணிதம் செய்து கொண்டிருக்க வேண்டிய தில்லை . ஒவ்வொரு முக்கிய நகரத்திற்கும் எவ்வளவு நேரம் கூட்ட வேண்டும்- எவ்வளவு நேரம் கழிக்கவேண்டும் என்ப தற்கெல்லாம் சில பஞ்சாங்கங்களில் பட்டியல்கள் கொடுக்கப்  பட்டிருக்கும் .இப்படிப்பட்ட பட்டியல்களை ஏல்லாம்  கத்தரித்து ஒன்று திரட்டி ஒரே புத்தகமாக வைத்துக் காண்டால் ,ஒரு ஜாதகத்தைப் பத்தே நிமிடங்களில் கணித்து விடலாம். உங்களிடம் ஆற்றல் இருக்குமானால் , நீங்களே கூட புதுமையாக

ஏதாவது டேபிள் செய்து அத்தோடு இணைத்துக் கொள்ளலாம் . 

( 7 ) ஜாதகம் பார்க்கும் போது உங்கள் அறையில் ஜாதகம் பார்த்துக் கொள்பவர் மட்டுமே இருத்தல் நல்லது . மற்றவர்களை வரவேற்பறையில் உட்கார வைக்க வேண்டும் .

 ( 8 ) ஜாதகம் பார்க்க வருபவர் , ஜாதகத்துக்குரிய வராக இருந்தாலன்றி நீங்கள் அவருக்கு ஜாதகம் பார்க்கக் கூடாது.

    ஜாதகத்துக்குரியவரே எதிரே இருந்தால் தான் உருவம் , தோற்றம் , நிறம் , உயரம் , மரு , மச்சம் முதலான கொண்டு லக்ணம் நிச்சயம் செய்ய வசதியாயிருக்கும் .

     மேலும் ஒரு ஜாதகத்தை நீங்கள் வர்ணிக்கும் போது , அச்சாதகத்துக் குரியவர் அதை உணர்ந்து அனுபவித்து சரி பார்க்க முடியும்.

 ( 9 ) அடுத்து ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் அது சரியாகக் கணிக்கப்பட்டிருக்கிறதா என்பதை நீங்கள் சோதனை செய்ய வேண்டும்

   ஜனன கால நிச்சயம் , லக்ன நிச்சயம் செய்யப்பட்டு , சரியாகக் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும் . சரியில்லையாயின் திருத்திக் கணிக்க வேண்டும் . உங்கள் கணக்கிற்கும் அதற்கும் இரண்டு லக்னங்களுக்கு ல் வித்யா சப்படின் , அல்லது வேறு ஏதாவது பெரிய பிழைகள் இருப்பின் ஜாதகத்தை நிராகரித்து விடுவது நல்லது.

    பெரும்பாலான ஜாதகங்கள் அரைகுறை கணித அறிவுள்ள ஜோதிடர்களாலேயே கணிக்கப்படுவதால் நட்டபில் பிழையுள்ள ஜாதகங்களே அதிகமாக உள்ளன.

   நகர்ப்புறத்தில் இக்குறைபாடு அதிகமிராது . கிராமப் புறங்களில் இது அதிகமாகக் காணப்படும் . 

   இக்குறைபாட்டை நீக்க , பெற்றோர்கள் கூறிய நேரத்தையும் , ஜோதிடர்கள் தாங்கள் திருத்தியமைத்த நேரத்தையும் , தனித்தனியே ஜாதகக் குறிப்பிலேயே கொடுத்து விடுவது மற்ற ஜோதிடர்களுக்கு பேருதவியாக இருக்கும் . ஒரு ஜாதகத்தில் நிறைய முரண்பாடுகள் , பிழைகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப் பட்டால்  , அந்த ஜாதகத்தைக் கொண்டு பலன் கூறாமல் , பிரச்ன ஆருடம் மூலம் பலன் கூறவேண்டும் .

 ( 10 ) ஜாதகத்தைத் திருத்தி சரியாக அமைத்துக் கொண்ட பின் , லக்னம் , லக்னத்தைப் பார்த்தவர்கள் , லக்னாதியின் நிலைமை , மற்றும் கிரக அமைப்புகள் கொண்டு அவர்களின் உருவ அமைப்பு , உயரம் , நிறம் , மரு , மாசம் . - விரணங்கள் பற்றியும் ; லக்னம் , லக்னாதி கொண்டு அவரது குண இயல்புகள் பற்றியும், மற்றைய வீடுகளின் தன்மைகளைக் கொண்டு ஒவ்வொன்றாக தனயோகம், வாகன யோகம் , திருமண யோகம், தொழில் சிறப்பு, ஜெயம், லாபம், விரயம் பற்றி எல்லாம் வரிசையாக. மிக அழகாக வர்ணிக்க வேண்டும்

தசா புக்திகளைக்கொண்டு சில கடந்த கால நிகழ்ச்சிகளின் தன்மைகளை வர்ணிக்கவேண்டும் . ஜாதகமும் பிழையில்லாமால் அமைந்திருக்குமாயின்- நீங்கள் கூறும் பலன்கள் சரியாக இருக்குமாயின் , ஜாதகம் கேட்பவர் பரவசமுற்று ஆச்சரியப் படுவார்கள்.என் நிலைமையை அப்படியே கூட இருந்து பார்த்தது போல சொல்லி விட்டீர்களே ! ' ' என்பார்கள் . இன்னும் பலப்பல வார்த்தைகளால் தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்துவார் . இப்படி அவர்கள் பரவசப்படுமாறு - ஆச்சரியப்படுமாறு நீங்கள் கூறிவிட்டீர்கள் என்றால் . அந்த விநாடி முதலே நீங்கள் சோதிடத் தொழிலில் மாபெரும் வெற்றி பெற்றுவிட்ட தாகக் கருதிக் கொண்டு விடலாம் ! இதுவே சோதிடத் தொழிலின் அதி முக்கிய அடிப்படை ..

   இப்படி நடந்தவைகள் , நடப்பு நிகழ்ச்சிகள் ஆகியன பற்றிக்கூறி அவரை ஆச்சரியப்பட வைத்த பின்பே , அந்த ஜாதகருக்கு நீங்கள் எதிர்காலப் பலன்கள் சொல்லவேண்டும் . அப்படிச் சொன்னால்  நீங்கள் சொன்னது சொன்னபடி நடக்கும் . உங்கள் பெயர் திக் கெட்டும் பரவும் , புகழும் , செல்வமும் குவியும் .

   ஜாதகத்தின் பிழையிருக்குமாயின் , நீங்கள் வர்ணனைகள் செய்யும்போது அவருக்கும் திருப்தி ஏற்படாது ; உங்களுக்கும் திருப்தி ஏற்படாது . அப்படிப்பட்ட சூழ் நிலையில் அப்பிழையான ஜாதகத்தை பிழையென்று கூறி தள்ளி விடுதல் உங்கள் மதிப்பை எவ்விதத்திலும் பாதிக்காது . பிழையுள்ள ஜாதகங்களுக்கு எதிர்காலப் பலன்கள் சொல்லக் கூடாது . அவர்களின் கேள்விகளுக்கு பிரச்ன ஆருடம் முறை மூலமாகவே பதில் கூறவேண்டும் .  

 

தொடரும் -----------


தொகுப்பு ;-   சூரியஜெயவேல்  

                          9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்