ஜாதகத்தின் பதரத்தை எடைபோடும் வழி

 ஜாதகத்தின் தரத்தை எடை போடும் வழி


   பூமியில் தோன்றும் ஒவ்வொரு மனிதனின் ஜெனன ஜாதகத்திலும் ராசிச்சக்கரம் அமையும் விதத்தில் அடிப்படை உயிர்நாடியாக இருப்பது ஜென்ம லக்கினமாகும் . 

     உயிர் வாழும் உடலுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இடமே சந்திரன் நின்ற ஸ்தானமாகும் . 

      இந்த உயிரும் உடலும் இணைந்து செயல்படும் ஆற்றலுக்கு ஆதாரமாக இருக்குமிடம் சூரியன் நின்ற இடமாக அமைகிறது . 

     ஆகவே தான் மேலே கூறிய ஜென்ம லக்கினத்தை விதி ஸ்தானம் என்றும் , சந்திரன் நின்ற ஸ்தானத்தை மதி ஸ்தானம் என்றும் , சூரியன் என்ற இராசி இல்லத்தை கதி ஸ்தானம் என்றும் , இம்மூன்று முக்கியமான இடங்களை ஜோதிட சாஸ்திரமானது விதி - மதி - கதி எனச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறது .

       இந்த மூன்று அம்சங்களும் அதாவது விதி ஸ்தானம் என்னும் லக்கினமும் , மதி ஸ்தானம் என்னும் சந்திரன் நின்ற ராசியும் , கதி ஸ்தானம் என்னும் சூரியன் நின்ற இராசியும் ஒரே இராசி இல்லத்தில் அமையப்பெற்ற ஜாதக அமைப்பினைப் பெற்றவர்கள் நல்ல ரசனை உடையவர்களாகவும் , செயல்வீரர்களாகவும் , மற்றவர்களை வசியம் செய்யும் அளவிற்கு கவர்ச்சி யான தனித்தன்மை கொண்டவர்களாகவும் , வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி வீறுநடை போடக்கூடிய வெற்றி வீரர்களாகவும் திகழ்வார்கள் . இது முதல் தர ஜாதகமாக மதிக்கப்படும் . 


     அடுத்தபடியாக விதி , மதி , கதி என்னும் லக்கினம் , சந்திரன் , சூரியன் இவற்றுனுள் ஏதேனும் ஒரு அம்சம் தனித்திட மற்ற இரண்டு அம்சங்கள் மட்டும் ஒரே இராசி இல்லத்தில் அமையுமாயின் இது இரண்டாந்தரமான ஜாதகமாக மதிக்கப்படும் . 

     இவர்களும் வாழ்க்கையில் ஓரளவு நடுத்தர முன்னேற்றம் பெறக்கூடிய தனிச்சிறப்பு பெறுபவர்களாக அமைவார்கள் .

     மேலே கூறிய விதி - மதி - கதி ஸ்தானங்கள் மூன்றும் தனித்தனியாக இராசி இல்லங்களில் அமைந்துவிட்டால் இந்த ஜாதகம் மூன்றாந்தரமான ஜாதகமாக அமையும் . இந்த அமைப்பினை மிகச் சிறப்பாக கூறமுடியாது . 

     மேலே இதுவரை கூறிய ஜோதிட விதியை மட்டும் வைத்து ஒரு ஜாதகத்தின் தரத்தை எடைபோட்டு விடக்கூடாது . இன்னும் அடுத்து சொல்லப்போகிற ஜோதிட விதிகளையெல்லாம் கவனித்து நன்கு சிந்தித்து சுபபலம் பாபபலம் இதில் எந்த பலம் மிகையாக இருக்கிறது என்பதையெல்லாம் சீர்தூக்கிப்பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் . 

      மேலே கூறிய விதி - மதி - கதி ஒரே இல்லத்தில் அமைந்திருந்தாலும் சரி , அல்லது தனித்தனியாக அமைந்திருந்தாலும் அந்த அமைப்புக்குரிய இராசி இல்லத்திற்குடைய ஆட்சி அதிபதிக்கிரகம் அதே இல்லத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெறும் நிலையில் அமைந்திருப்பது பலன் தரும் 

        . லாப விதிஸ்தானமாக அமையும் லக்கினத்திற்குடையவன் அந்த விதிஸ்தானமான லக்கினத்திற்கு கேந்திர திரிக்கோண ஸ்தானங்களாகிய 1,4.7 , 10 , 5 , 9 , 11 ஆமிடங்களிலொன்றில் பலத்துடன் அமைவதுதான் நல்லது .

     இதேபோல மதி , கதி தங்கள் தங்கள் ஸ்தானங்களுக்குடையவர்களும் தங்கள் . ஸ்தானங்களிலிருந்து கேந்திர , திரிகோண ஸ்தானங்களிலொன்றில் அமைந்திடில் அந்த ஜாதகம் நல்ல ஜாதகம் ஆகும்.


    இதற்கு மாறாக விதி ஸ்தானாதிபதி விதி ஸ்தானத்திற்கு 6,8.12 ஆமிடங்களிலும் மதி ஸ்தானாதிபதி மதி ஸ்தானத்திற்கும் . 6.8.12 ஆமிடங்களிலும் , கதி ஸ்தானாதிபதி கதி ஸ்தானத்திற்கு 6,8,12 ஆமிடங்களிலும் சிறப்பான பலன்களை நல்கிட முடியாது .

        அடுத்தபடியாக விதி - மதி - கதி ஸ்தானங்கள் அமைவதே 6,8,12 என்ற அமைப்பில் இல்லாமல் கேந்திர திரிகோண லாப ஸ்தான அமைப்பாக தங்களுக்குள் அமைந்துவிடுவது நல்லது . 

    எடுத்துக்காட்டாக கடக லக்கினம் மிதுன ராசியில் சந்திரன் என்றால் விதி ஸ்தானத்திற்கு மதி ஸ்தானம் 12 ஆமிடமாக அமைகிறது. இது நல்லதல்ல . ஆனால் இதே கடக லக்கினத்திற்கு சந்திரன் மீனத்தில் இருப்பது விதிக்கு மதி திரிகோண அமைப்பு எனவே இது நல்லது . 

   இத்துடன் விதி - மதி - கதிக்குடையவைகளான லக்கினாதிபதியும் சந்திரன் நின்ற வீட்டதிபதியும் , சூரியன் நின்ற வீட்டதிபதியும் கூட தங்களுக்குள் மறைவு ஸ்தானங்களாக அமையும் . 6. 8 , 12 ஆக அமையாமல் ஒருவருக்கொருவர் கேந்திர கோண லாப ஸ்தான அமைவு பெற்றிருப்பது நல்லது . 

     இனி மேற்கூறிய விதிகளை நன்கு புரிந்துகொள்ள ஒரு உதாரண ஜாதகத்தின் மூலம் விளக்கம் தருகிறேன் . 


உதாரண ஜாதகம் 1


 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸருடையது இவர் தெய்வாம்சம் பெற்ற ஞானி விவேகானந்தரை ஞானச்சுடராக உலகத்திற்கு அளித்த குருநாதர் . இந்த உலகம் உள்ளவரை இவரை மனித குலம் மறக்கமுடியாது .

  இவருடைய பாருங்கள் . விதி - மதி - கதி ஸ்தானங்கள் மூன்றும் கும்பராசியாகிய ஒரே இல்லத்தில் அமைகிறது . எனவே விதி மதி - கதி ஸ்தானதிபதியும் ஒரே கிரகமான சனியாகி அவரும் திரிகோண ஸ்தானமான 9 ஆம் இடத்தின் உச்சபலம் பெற்றுத் திகழ்கிறார் . இந்த ஜாதகம் மிக உத்தமமான சிறப்பு மிகு ஜாதகம் என்று கொள்வதில் எந்தவித மறுப்பும் கூறமுடியாது . 



உதாரண ஜாதகம்  2

    இந்த ஜாதகம் நமது பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாருடையது . இவருடைய ஜாதகத்தில் விதி , மதி , கதி ஸ்தானங்கள் தங்களுக்குள் கேந்திர கோண லாப ஸ்தானத்தில் அமைந்திருப்பது கவனிக்கவும் .

     ஆனால் கதி ஸ்தானம் என்னும் சூரியன் நின்ற இல்லத்திற்குடைய செவ்வாய் மட்டும் விதி , மதி ஸ்தானங்களை தனக்கு 6 , 12 ஆமிடமாக அமைகின்ற நிலையில் அமையவீற்றிருப்பது சிறப்பான தாகாது . எனவே இந்தக் குறைபாட்டினால் இவருடைய ஜாதகம் இரண்டாந்தர ஜாதகமாகக் கொள்ளலாம் . 



உதாரண ஜாதகம் 3

    இந்த ஜாதகத்தைப் பாருங்கள் இதில் விதிக்கு மதி 8 ஆகவும் , மதிக்கி கதி 8 ஆகவும் இருப்பது நல்லதல்ல . கதி ஸ்தானத்திற்கு உரியவன் ஸ்தானத்திற்கு 12 லும் விதி ஸ்தானத்திற்கு உரியவன் விதி ஸ்தானத்திற்கு 6 லும் அமைவது நல்லதல்ல . மதிஸ்தானாதிபதி மட்டும்.

 மதி ஸ்தானத்திற்கு கேந்திரம் பெற்றிருக்கிறது . இந்த அமைப்பினை மூன்றாந்தரமான ஜாதகமாகவே கொள்ள வேண்டும் . இந்த மேற்கூறிய முறைகளை நன்கு நினைவில் கொள்ளுங்கள் .



சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்