ஜோதிடத்தில் சூரியன் சனி (சேர்க்கை)

 ஜோதிடத்தில் சூரியன்  சனி (சேர்க்கை)


      சூரியனும், சனியும் கூடி, ஆட்சி, உச்சத்தில் இருந்தாலும், தங்களது நவாமசத்தில் இருந்தாலும், கேந்திர, திரிகோண அதிபர்களாக இருந்தாலும், ஜாதகர்க்கு சனிதசா சூரிய புக்தியில், அரச வழி அனுகூலமும், செல்வம், மகிழ்ச்சி, முதலிய பலன்கள் நடக்கும். மேலும், சூரியன் திசா சனிபுக்தியில், ஜாதகர்க்கு மகிழ்ச்சி,செல்வம், வெற்றி ஆகியவை நடக்கும். இவ்விரண்டு கிரகங்களும் பாவிகளாய் இருந்தால், ஜாதகர்க்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும்.

     கர்க மகரிஷி தம் கர்கஹோரை எனும் ஜோதிடக்கிரந்தத்தில் பின் வருமாறு கூறுகிறார்.


 1 ம் பாவம்; இதில் சூரியன், சனி கூட, முட்டாள், வியாதி உள்ளவன், தன்னைச் சேர்ந்தவர்களால் கைவிடப்பட்டவன். நல்ல குணமில்லாதவன்.


 2 ம் பாவம்; அதிக ரோகம் உள்ளவர். தயை தாட்சண்யமில்லாதவர். முறையாற்ற பேச்சு,. கோபத்தை விட்டவர். சாதுக்களின் சேர்க்கை இல்லாதவர்.


 3 ம் பாவம்; ஸ்திரமான தீய எண்ணம் உடையவர். சூரர். எதிரிகளை கொல்பவர். பிரியமாய் பேசுவதில் வல்லவர். அரசர்க்கு அனுகூலமானவர்.


 4 ம் பாவம்; தேவதைகளால் பீடையுடையவர். அதிக கோபம் உள்ளவர். கலகத்தில் ஆவலுள்ளவர். உடல்பலவின மந்தக்குணம் உள்ளவர்.


 5 ம் பாவம்; செம்மாண் கல் விற்பவர். குணசாலி. தர்மம் செய்வதில் பிரியமுடையவர். மனைவி, மக்களால் சுகமுடையவர். எப்போதும் நிறைந்த மனதுடையவர்.


 6 ம் பாவம்; ரோகமில்லாதவர். பாபமில்லாதவர். அதிக புத்தி, ஆயுதங்களோடு, தனமும் உடையவர். நல்ல வேலைக்காரர்களை உடையவர்.


 7 ம் பாவம்; பெண் சுகமற்றவர். கெட்ட மனைவியை உடையவர். அதிகமான பகைவர்களை உடையவர். என்றும் நோயுடையவர்.


 8 ம் பாவம்; அதிக சளித் தொல்லைகளுக்கு ஆளாவார். வாயுவாலும் தொல்லையிருக்கும். சத்தியம், தயை இல்லாதவர். எப்போதும் தேச சஞ்சாரத்திலே பொருள்  ஈட்டுபவராய் இருப்பார்.


 9 ம் பாவம்; தனம் புத்தி உள்ளவர். களத்திரத்தினால் அதிக சுகமுடையவர். சத்ருககளை ஜெயிப்பவர்.


 10 ம் பாவம்; விசாலமான கண்களை உடையவர். தோள்வலிமையுடையவர். நல்ல முக அழகுடையவர். நீண்ட தலைமுடிகளை உடையவர்.


 11 ம் பாவம்; பலவழிகளிலும் இலாபம் அடைபவர். நல்ல மனம் உடையவர். பண்டிதர். நன்றியுள்ளவர். ரோகமில்லாதவர். சந்தோஷமானவர்.

 12 ம் பாவம்; மக்களின் விரோதி. நீசத்தனமானவர்களிடம் ஆசையுள்ளவர். நீச காரியம் செய்பவர். அதிக செலவாளி. அதனால், துன்பப் படுபவர்.

      கர்க மகரிஷி  கர்க ஹோரையில், 3, 5, 6, 9, 10, 11 ல், சூரியன், சனி கூடுவது, நன்மையானப் பலன்களையே தரும் என்கிறார். மற்றவிடங்களில் கூட, தீமையான பலன்களையே தரும் என்கிறார். இதேபோல்,

     ஜம்பு நாதீயம் எனும் ஜோதிடரிஷி ஜம்புநாதீயம் எனும் ஜோதிட நூலில், இந்த சூரியன், சனி இணைவை, குறிப்பிட்டுள்ளார். அதையும்  காண்போம்.

 1 ம் பாவம்; திருட்டுப்பயமுடையவர்.

 2 ம் பாவம்; தனம், செல்வம் போய் விடும்.

 3 ம் பாவம்; தீர்க்காயுள் உள்ளவர். போகம், சம்பத்து, வெற்றியும், புத்திரரால் யோகமுடையவர்.

 4 ம் பாவம்; எவர்க்கும், எதையும் ஈயாதவர். மனதளவில் தாழ்ச்சியுடையவர். என்றும் வறுமையிருக்கும்.

 5 ம் பாவம்; தத்து புத்திர யோகமுடையவர்.

 6 ம் பாவம்; சொந்த இனத்தாரால் வெறுத்து, ஒதுக்கப் படுவர்.

 7 ம் பாவம்; தந்தையின் சாபத்தையுடையவர்.

 8 ம் பாவம்; உடல் நலம் பாதிக்கும். தனம் செல்வம் பறிபோகும். பயந்தங்கொள்ளி. தேச சஞ்சாரி. துவேசமுடையவர்.

 9 ம் பாவம்; தெய்வ நிந்தனை செய்பவர். வெளிதேசவாசம் உடையவர். பரதார இச்சை செய்பவன்.

 10 ம் பாவம்; சேனாதிபதி, தண்டிக்கும் அதிகாரமுடையவர். பராக்கிரமம் உடையவர்.

 11 ம் பாவம்; தீர்க்காயுள்,  நிலையான புகழ். செல்வம், நோயற்றவன், நல்லறிவு உள்ளவன்.

 12 ம் பாவம்; தன் குல விரோதி. புத்தியில்லாதவன். தரித்திரன். மோசக்காரன். அங்கக் குறையுள்ளவன்.

     ஜம்புநாதீயத்தில் 3, 10, 11 மிடங்களில் கூடுவது, நன்மையான பலன்களைத்தரும். மற்றவிடங்களில் கூடினால், கெடுபலன்களே ஏற்படும் என்கிறார்.

      சூரியனோடு இணைந்த சனியைப்பார்த்து, சூரியன் சொல்கிறார்.

இந்த பலன் கெடுதி செய்யும் இயலா பாவி

    என்னுடன் நீ வந்து சேர்ந்த குற்றம்

சுந்திரமாய் வீடுமுதல் தனங்கள் யாவும்     

  தொலைத்திடுவேன் சுகமதுவும் சற்றுமின்றி

அந்திரமாய் இவன் தன்னை அலையச் செய்து

    அயலாரால் அவமானம் ஆக்கிவைப்பேன்”   (சுகர் நாடி 373 ) 

 கெளசிக முனிவர்க்குக் கொடுத்த வாக்கையும், உண்மைநிலை தவறாமலும் இருக்கவும்,அரிச்சந்திரன், தன் நாடு, நகரங்களையும், அரண்மனை செல்வங்களையும், தாரைவார்த்துவிட்டு, தன் மனைவி, மகனுடன், தன் நகர்விட்டு வெளியேறுகிறான். அடர்ந்த காட்டுக்குள் அலைந்து திரிகிறான். கெளசிக முனிவரின் சீடரான சுக்கிரனால் அவமானப்படும் படியான ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்கிக் கொள்கிறன்.

செப்பிடவும் இயலாத ரோகம் ஈவேன்

     செஞ்சோற்றின் சுவைதன்னை மாற்ற வல்லேன்

இப்புவியில் நகர்விட்டு நீங்க செய்வேன்

       இயம்பவொண்ணா பெருந்துன்பம் ஈவதன்றி

 அப்புறமும் சித்திரவதை செய்வதல்லால்

     அச்சமது மனம் தன்னில் அடையேனய்யா.  (சுகர் நாடி 374 )

 பரந்த பூமியில், தன் நகர் விட்டு அகன்ற, அரிச்சந்திரனின் கண்முன்னே நிற்கும், பெரும் காட்டுக்குள் நுழைகிறான். அரண்மனையின் அந்தபுரத்துக்குள் அன்னநடையிட்டு வந்த சந்திரமதிக்கு, கானக வாசம், கடும் துன்பத்தைத் தந்தது. சுவையாக உண்டு பழகியவர்கள், காட்டுக் காய், கனி, கிழங்குகளை உண்ண வேண்டி இருந்தது. கொடும் பசி தணிய, சுவை மறந்து உண்டனர்.

 கெளசிக முனிவரின் சீடன் சுக்கிரனால்,அவமானமும், சித்திரவதைக்கும் ஆளானார்கள் மனதளவில் அச்சமும் அடைந்தனர். இந்த கொடும் நிலையிலிருந்து மீளும் வழி தெரியாமல், கவலையும், கலக்கமும் அடைந்தனர். அடிமனதின் ஆழத்திலிருந்து, துயரம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. போக்கிடம் தெரியாத இருட்டான வாழ்வு, தம் கண்முன்னே நிழலாடுவதை, அரிச்சந்திரன் உணர்ந்தான்.

 மீண்டும் சூரியனுக்கும், சனியுக்கும் தர்க்கம் ஏற்படுகிறது.

 அன்னமெனும் மனையாளால் துன்பம் துன்பம்

    அவ்விடத்தை நீக்கி வைத்து அலையச் செய்வேன்

 சொர்ணமதை கண்டோர்க்கு சூரை விட்டுச்

     சூதுக்களும் வாதுக்களும் சூன்யக்கண்டம்

இன்னுயிரை விட்டிடவும் இறக்கச் செய்து

     எல்லோரும் நகைக்க இவன் துகில் அகற்றுவேன். (சுகர் நாடி 375) 

 வசிட்டமுனிவரின் வாதத்தாலும், கெளசிக முனிவரின் சூதாலும், சரிந்தது என்னமோ அரிச்சந்திரனின் சாம்ராஜ்யம் தான். கெளசிக முனிவரிடம் தன் நாடு, நகரங்களையும், தன் கணக்கற்ற செல்வங்களையும் சூரைவிட்டுவிட்டு,  கானகம் கடந்து காசிமாநகரை, அடைய எத்தனித்தவனுக்கு, தன் அன்னமெனும் மனையாள், “இட்ட அடிநோக, அடுத்த அடி கொப்பளிக்க,” என்று நடப்பதற்கே, தடுமாறும் நிலைகண்டு, தன் உயிரை உருவிப்போட்டதைப்போல், துடித்தான்.

 தன் சத்தியத்தின் சோதனைக்கு, தன் குடும்பம் சிக்கி, சின்னாபின்னமடைவதைக் கண்டு, தன் இன்னுயிரையும் விட்டிடவும் சிந்திப்பானல்லவா?

 இவையெல்லாவற்றையும் விட மிகக்கொடுமையாக,

 கோசலை நாட்டை செங்கொலேந்தி அரசாண்ட, அரிச்சந்திரன் கைகளில், இப்போது மூங்கில் களி.

 அரசவை, இப்போது பிணம் எரிக்கும் மயானக் கரை. அன்று அரச தோரணை. இன்று சுடுகாட்டு மரத்தில் பரண்

 அன்று மணிமுடியும், செவிகளில் குண்டலமும், நீண்ட கரங்களில் பொன் வளையமும், தேகம் முழுக்க சிந்தாமணியும், இடுப்பில் மணிமேகலையும், கால்களில் சிலம்பும் அணிந்திருந்தவன், இன்று மானம் மறைக்க ஒட்டுக்கோவணத்துடன், பொங்கித்தின்ன கால்படி அரிசிக்காக, “சூரியகுலம்” புலையனாய் பிணம் எரித்துக் கொண்டிருக்கிறது.

 விடுவேனோ இன்னமும் தான் விளம்புகின்றேன்

     வீடு நிலம் பொருள் யாவும் அயலார் கொள்வர்

கடும்விஷம்போல் புத்திரரைக் கறுவறுப்பேன்

    கண்கலங்கி மனங்கொதித்துக் கவலைமிஞ்சும்

அடிமைப்பட செய்திடுவேன் அயலார்க்குள்ளே

    அதினாலும் சுகமதுவும் அடுத்துக் காட்டேன்.

நெடுநாளும் ஓட்டாணடியாக்கிப் பின்பு

    நீணிலத்தில் வயிறு பிழைக்க விழித்திட்டேன்.   ( சுகர் நாடி 376. )

 சரி. நாடு,நகரம், வீடு, வாசல், செல்வம் அத்தனையையும் புடுங்கியாச்சு. நாட்ட விட்டு காட்டுக்கு விரட்டியாச்சு. அவமானப்படும்படியா ஏசியாச்சு, பேசியாச்சு. மனம் வெறுத்துப்போகும் படியா செஞ்சாச்சு. சூரிய(ன்)ங்கிற அக்னிய வைச்சு, இவங்க தங்கியிருந்த காட்டவும் எரிச்சாச்சு. எமதர்மங்கிற சனிய வச்சு உயிர் பயம் காட்டியாச்சு. மரண பயம் வந்து, மனம் கலங்கி நின்னாச்சு. வயிற்றுக்காகத்தான் வாழ்க்கை எனும் நிலையையும் உருவாக்கியாச்சு. ஆனாலும், இன்னும் ஏதோ குறையிருக்கிறதே, என்று நினைத்த விதி

 “ கடுவிஷம் போல் புத்திரரைக் கருவறுப்பேன்

 கண்கலங்கி மனம் கொதித்துக் கவலைமிஞ்சும் “ 376

 சூரிய குலத் தென்றல் அரிச்சந்திரனின் அன்புமகனும், சந்திரமதியின் ஜீவனும், அயோத்தியின் இளவரசுமான லோகிதாசன், கடும் விஷம் கொண்ட கருநாகத்தால் தீண்டப்பட்டு மாண்டான்.

 இவ்வளவு துன்பங்களையும் ஒருமனிதனால், தாங்கமுடியுமா? தங்கமுடியும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அரிச்சந்திரனின் பிற்பகுதி புராணக்கதை, நாம் குறிப்பிட்டுள்ள பாடலுக்கு மிகப்பொருத்தமாக பொருந்தி வருவதை காண்பீர்கள். பொருந்தி வரும் கருத்துக்களைத் தவிர, இப்பாடலுக்கும், புராணக் கதைக்கும் தொடர்பில்லை.

 அரிச்சந்திரன் வாய்மைக்கான சோதனையை எதிர் கொண்டான். வென்றான். சாதித்துக் காட்டினான். அவன் முன் தோன்றிய மும்மூர்த்திகளும் வாழ்த்தினர். மீண்டும் அயோத்தியின் மன்னன் ஆனான். சத்தியம் தவறாத ஆட்சியை மண்ணில் நிகழ்த்திக் காட்டினான்

 வாழ்க்கையெனும் போரட்டத்தில் புதிய புத்தகம்தான் நம்பிக்கை. இதை தொலைத்தவர்கள், வேறு எதையும் பெற முடியாது. போராட்டக்களத்தில் வெற்றி, தோல்வியென்று எதுவும் கிடையாது என்று நினைப்பவர்களால் தான், வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நடக்கத் தகுதியானவர்கள். வாழ்க்கையின் போராட்டம் வசதிகளை பெறுவதற்கில்லை.

 நம் வாழ்வு மேல் மட்டத்தில் உள்ளதா? மைய மட்டத்தில் உள்ளதா? அல்லது அடிமட்டத்தில் உள்ளதா? என்பதனை அளக்க, ஓர் அளவுகோல் தேவைதான். அது பணத்தினை மையமாக வைத்து இருக்க கூடாது. மனத்தினை வைத்து இருக்க வேண்டும். மனம் நிறைந்த வாழ்க்கைக்கு விலையேதுமில்லை.

 ஓர் அமைதியான வாழ்வின் அடித்தளம் என்பது, குடும்ப வாழ்வும், பொருளாதார நிலையும் அமையும் விதத்திலே உள்ளது. நல்ல அடித்தளத்தில் அமையாத வாழ்வும், வளமும், சூரியன், சனி போன்ற கிரகங்களின் தாக்குதலுக்கு ஆளாகும். நாம் மனஒருமைப்பாடோடு, எதிர்த்தால், “வாழ்க்கை வாழ்வதற்கே” என்பதின் அர்த்தம் புலப்படும். வீழ்ச்சி என்பது இல்லை. எழுச்சியே இனி எல்லை.

 ஆண், பெண்  இருபாலரில் யாருக்கேனும் சூரியன், சனி இணைவு பத்துப் பாகைக்குள் இருந்தால், குறிப்பாக, 2, 4, 7, 8, 12 லிருந்தால் வாழ்க்கை கொந்தளிப்பாகத்தான் இருக்கும். சிம்மம், மகரம், கும்பம் இலக்கினக்காரர்களுக்கு சூரியன், சனி இணைவு, இவர்களின் தசா, புக்தி, அந்தரகாலங்களில், வரப்போகும் தீவினையை எதிர்கொள்ள, தனியான மனதுணிவு தேவைதான். 

 கொடுத்திடுவேன் என்றுரைத்தாய் கூறுவாயே

       குமரனெனும் உள்ளடுமை குறுகிஉன்னை

 அடுத்தத்து விதிநோக்க முற்றமர்ந்தால்

      அல்லலுடன் உன்பலத்தை அகற்றிவிட்டு

  கொடுத்திடுவேன் அங்கமதில் ரோகம் தானே

      தொந்திரவும் பெண்டீர்க்கும் பிள்ளைக்க்கேதான்

 அடுத்தடுத்துக் கண்டங்கள் மீறச் செய்வேன்

        அப்புறமும் மனக்கவலை மீறச் செய்வேன். ( சுகர் நாடி 544)

     மனதுக்குள் கவலைகள் புகுந்துவிடாதபடி, சூழ்நிலைகளை எளிதாக எடுத்துக்கொள்ளும், மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனம் காயப்பட்டுப் போனா ல், வாழ்க்கையே, புரையோடிப்போகும்.

 மட்டில்லா மனக்கவலை மலைபோல் ஈவேன்

   மர்மங்கள் வெளி வெளியாய்ச் செய்வேன் யானும்

 பொட்டெனவே உயிர் மாய்க்கப் புகட்டுவேன் யானும்

   பொல்லாங்கு சோரபயம் எல்லாம் ஈவேன்

  வெட்டெனவே உறவினர்கள் சதியே செய்ய

    பொல்லாங்கு பில்லியோடு சூனியம் ஈவேன்

 அயல் வீட்டில் குடியோட அடிப்பேனய்யா

      அன்னமதை விஷமாக ஆக்குவேன் யான். ( சுகர்நாடி 545)

      இப்பாடலில் உள்ளபடி ஒருவனுக்குப் பலன்கள் நடப்பதாக வைத்துக்கொண்டால், அச்சாதகன் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தாலும், சூரியன், சனி, தசாபுக்தி அந்திர காலத்தில் மிகவேகமாக அடித்தட்டு வாழ்க்கை முறைக்கு வந்துவிடுவார். மட்டில்லா மனவலிமை மட்டும், ஜாதகர்க்கு இருந்தால் மட்டுமே, வருங்காலம் முன்னேற்றமான காலமாக அமைந்திருக்கும்.

 பயப்பட்டு நடுநடுங்கப் பதைபதைக்க

     பற்பலவாய் பயம்காட்டிப் பான்மையோட்டி

  நன்மையின்றி பூமிநிதி எல்லாமய்யா

     நாசமய்ச் செய்திடுவேன் நன்மையின்றி

 குலமாதர் தங்களையும் குலைப்பேனய்யா

   கூறிடுவேன் அபவாதம் குடும்பத்துள்ளே,    ( சுகர் நாடி 546.)

 ஒரு மனிதன் சொத்து, சுகம் அனைத்தையும், இழந்துவிடலாம். ஆனால், கணவனையோ, மனைவியையோ இழந்துவிடக் கூடாது. எவ்வளவு சோதனைகளையும் தாங்கும் மனம், குடும்பத்தின் மீது விழும், அபவாத பேச்சினைக் கேட்டு கலங்கி விடும். மனஒழுக்கம் உள்ளவர்கள், அபவாதப்பேச்சிலிருந்து, விரைவில் விடுபட்டுவிடுவர். ஆனாலும், “வெள்ளைத்துணியில் விழுந்த கறுப்புச் சாயம் தான்” கறைகள் மறையாது.

 உள்ளத்தில் அழல் வியாதி உருகச் செய்வேன்

     உத்தமர்கள் யாவருமே உறுத்துவார்கள்

 தெள்ளமுதம் போல் புசிப்பைத் தீண்டச் சேய்வேன்

       திங்களைப்போல் செல்வங்கள் சிறுக்கச் செய்வேன்.

 கள்ளர்களின் பயமதனைக் காளைக்கீவேன்

    கண்கலங்கி மனங்கொதித்துக் கவலைஈய்வேன்

 துள்ளிவரும் ரோகமதைக் குடும்பத்துள்ளே

    துண்மார்க்கங்கள் தம்மாலே துன்பமுண்டு  ( சுகர் நாடி 547)

    ஒருவனுக்கு கவலைகள் அதிகமாக, அதிகமாக, உள்ளம் நெருப்பாய் தகிக்க ஆரம்பித்துவிடும். கெட்டவர்கள், எதைப் பேசினாலும், உலகம் பொருட்படுத்தாது. ஆனால், நல்லவர்களை உற்று நோக்கினாலே போதும், அந்த பார்வையின் நெருப்பிலே உள்ளம் உருகிவிடும்.

 அற்பர்களால் புழுக்கமனம் ஆக்கி வைப்பேன்

   அல்லல் எனும் துன்பங்கள் அதிகம் ஈவேன்

 ஒப்புரவாய் யாவற்றும் விலகச் செய்வேன்

     ஓங்காமல் எத்தொழிலும் ஒடுக்குவேன் யான்

 இப்பு வியில் தனதானிய பூமியெல்லாம்

     இழந்திடவும் செய்வதொடு இரங்கேன்யானும்

 செப்பிவிட்டேன் என்பலனை யெல்லாமிப்போ

    செங்கதிரே உன்பலனைக் காட்டிடாயே

          ( சுகர் நாடி 548. )

   இங்கே குறிப்பிடப் பட்டுள்ள பாடல்களில், எல்லாவற்றிலும், “மனம்” என்கிற சொல் பயன்பட்டிருப்பதைக் காணலாம். காரணம்  சனியெனும் இருள்கிரகம், சூரியன் எனும் ஒளிக்கிரகத்தை நோக்கி கூறுவதாக உள்ளது.

     நாம் ஏற்கனவே, சனியின் காரகங்களைப் பற்றி அறிந்துள்ளோம். அதில், “மனப்பேதலிப்பு” க்கு சனி காரகனகிறார். ஒருவன் மனதளவில் கலக்கமடைந்து விட்டால், திங்களைப் போல் செல்வங்கள் மட்டும் சிறுக்காது. ஜாதகரின் எண்ணங்களும், சிந்தனைகளும் சிறுத்துவிடும். மேலும், கர்மக் காரகன் சனியாவார். இலக்கினத்துக்கு எட்டு, பனிரெண்டில் சூரியனும், சனியும் அமர, இதுவரை செய்து வந்த அலுவலும், தொழில் முறைகளும் பாதிக்கப் படுகின்றன. காலபுருடத்திற்கு பத்தாமதிபதியான சனியால், எந்த தொழிலும் விருத்தியில்லாமல், ஒடுங்கிப் போய்விடும்.

 வளர்பிறை காலங்களில் பிறந்தவர்களின் ஜாதகத்தில், சூரியன், சனி இணைவு பத்துப் பாகைக்குள் இருந்தால், கெடுபலன்கள் யாவும், சூரியனாலே நடந்து வரும்.

 தேய்பிறை காலங்களில் பிறந்தவரின் ஜாதகத்தில், சூரியன், சனி இணைவு பத்துப் பாகைக்குள் இருந்தால், கெடுபலன்கள் யாவும் சனியினாலே நடந்து வரும்.

    சூரியன், சனி இணைவு, தந்தை, மகன் இணைவுக்குச் சமம். இருவருக்கும் ஆதிக்க உணர்வும், அடங்க மறுக்கும் எண்ணங்களே அதிகமிருக்கும். தங்களுக்குள் இருக்கும் குறைபாடுகளைக் களைந்து விடுவதாக நினைத்து, கிளறி விட்டுக் கொள்ள வேண்டாம். மனத் தாழ்ச்சியுடன் தன்னைத் தாழ்த்திக்கொள்வதன் மூலம், மனதை செம்மைப் படுத்திக் கொள்ளலாம். இதனால், சூரியன், சனி இணைவால், நிகழப்போகும் கெடுபலன்களைக் குறைத்துக் கொள்ளலாம்.


தொடரும் -------------


சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்