சுப - அசுப பலன்களை அளிக்கும் 20 ஆகிருதி யோகங்கள் !

 சுப - அசுப பலன்களை அளிக்கும் 20 ஆகிருதி யோகங்கள் !

கிரகங்கள் குறிப்பிட்ட வீடுகளில் அல்லது ராசிகளில் இருப்பதால் ஏற்படும் யோகங்கள் ஆகிருதி யோகங்கள் எனப்படும் . இதில் ஒரு சில சுப யோகங்களும் ஒரு சில அசுப யோகங்களும் உண்டு .

ஜோதிட மேதை வராகமிகிரர் தந்த பிருஹத் ஜாதகம் என்ற நூல் இன்றைய நவீன ஜோதிட நூல்களுக்கெல்லாம் அடிப்படையாக உள்ளது. அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நாபஸ யோகங்களில் உள்ள 20 ஆகிருதி யோகங்களில் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

1 - யூப யோகம்

"சுகமொடு மூன்றிரண்டு தூயநற் சென்மந்தன்னில்

பகலவன் முதலேழ் கோளும் பற்றிட யூபயோகம்

மகமுடன் யாகஞ்செய்து மகிழவிற் பாகமீவேன்

மிகுவிதரணை யினோடு மேவுமிங்கு தகுணத்தான்"

(இ-ள்) லக்னம் , இரண்டு , மூன்று , நான்கில் சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு சுக்கிரன் , சனி இருந்தால் யூப யோகம் எனப்படும் . இந்த யோகம் உடையவர்கள் தன்னலமற்ற குணமுடையவர்கள் . தர்ம காரியங்களுக்கு உதவுவார்கள் . பொதுச் சேவைகள் செய்பவர்கள் புகழ் சுகவாழ்வு அமையும்

2 - சர யோகம்

"நாலுடனைந் தாறேழில் நாடுமேழ் கோவேநிற்க

ஞாலமீதுதித்த சேய்க்கு நண்ணி சரயோகந்தான்

சாலவு மரனிரில்லில் தங்குவான்வில் பழக்கம் சீலனும் கொலைஞன் மர்மதிகழ்சாலை காவலோனே !

(இ-ள்) 4 , 5 , 6 , 7 - ல் சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இருந்தால் சரயோகம் எனப்படும் . இவர்கள் சிறைச் சாலையின் தலைமைக் காவலர் , தீய கூட்ங்களின் தலைமைப் பதவி போன்றவற்றை வகிப்பார்கள் .

3 - சக்தி யோகம்

"காமமோடாயுள் லாடம் கருமத்தி லெழுகோள் தங்க

தீமை சேர்சக்தி யோகம் திரவியமில்லான் மந்தன்

நேமமாஞ் சுகமுமீனம் நீசகிர்தியமே செய்வன்

தாமத குணத்தனென்றே சதுர்முகன மைத்ததாமே "

(இ-ள்) ' 7 , 8 , 9 , 10 ல் சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி ஆகியோர் இருந்தால் அது சக்தி யோகம் . இந்த ஜாதகருக்கு சுகமும் தனமும் கிடைப்பது அரிது . சோம்பேறிகளாகவும் இழி தொழிலைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

4 - தண்ட யோகம்

"ஜென்மராறு லாபம் செப்பிடு கருமந்தன்னில்

தினகரன் முதலேழ் கோளும் திரமுடனிருக்க வந்தான்

கனமுறு தண்ட யோகம் கதியது பாவஞ்செய்து

இனமுள நேயர்தம்மை யிகலினால் விலக்குவானே . '

(இ-ள்) 10 , 11 , 12 - ல் சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இருந்தால் தண்ட யோகம் . இத்தகைய ஜாதகருக்கு தீய பலன்கள் அமையும் . உற்றார்- உறவினர்களைப் பகைத்துக் கொள்வார்கள் .

5 - நௌ யோகம்

' சகலரு முதயந்தொட்டு தனியாயே ழிடமிருக்க

இகமதில் நௌயோகந்தா னெழில் சுகம் சற்றுமில்லா

தகமையான் லோபியாகும் சம்பத்து கீர்த்தி செல்வம்

புகழொடு புண்ய மற்றோன் பூவினி லிருப்பனாமே . '

(இ-ள்) லக்னம் , 2 , 3 , 4 , 5 , 6,7 - ல் சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இருந்தால் நௌ யோகம் எனப்படும் . இத்தகைய ஜாதகர் சுகமில்லாதவர் . இந்த உலகில் கஷ்டமுடன் இருப்பார்கள். ( அமார் பி.எஸ் ஐயர் அவர்கள் மஹாயோக தரங்கிணியில் , நௌ யோகம் மிக அபூர்வமானது . மிக நல்ல யோகமாகும் . இந்த யோகம் மாலா யோகமாகக் கருதப்படும் ' என்கிறார் )

6 - கூட யோகம்

"சுகமுதற் கரும மட்டும் சுடராதி யெழுவர் நிற்க

சகமதிலுதித் தோர்க்கெல்லாம் சாற்றினொங் கூட யோகம்

பகருவன் கடுஞ்சொல்மிக்க பண்பதும் சத்யமற்றோன்

அகமுளன் காவற் கூவதிகாரி லோபியாமே"

(இ-ள்) 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 - ல் சூரியன் , சந்திரன் செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இருந்தால் கூட யோகம் . இத்தகைய ஜாதகர் பொய் , கடுஞ்சொல் பேசுபவர்களாகவும் சிறைச்சாலை , மயானம் ஆகியவற்றில் வேலை செய்பவர்களாகவும் , சிறைத்தண்டனை அடைபவர்களாகவும் இருப்பார்கள் .

7 - சத்ர யோகம்

"காமனாரகத்தைத் தொட்டு கருதிய ஜென்மமட்டும்

நேமமாயெழுவர் நிற்க நிலைபெரு க்ஷத்ர யோகம்

தீமையில்லாதன் பந்து சினேகரால் சுகமே பெற்று

தாமதன் மூப்பில்மிக்க தனசவுக்கியவானாமே"

(இ-ள்) 7 , 8 , 9 , 10 , 11 , 12 , 1 - ல் சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இருந்தால் சத்ர யோகம் . இந்த ஜாதகர் நண்பர்களால் நன்மையும் , மகிழ்ச்சியான செல்வ வளமும் பெற்று , வயதான காலத்தில் சுகமுடன் வாழ்வர் .

8 - தனுர் யோகம்

"பத்தாதி சுகம் வரைக்கும் பகல் முதலெழுவர் தங்க

இத்தல முதித்த பேர்க்கு வெழிலுறு தனுசு யோகம்

உத்ததோர் பிலவான் சூரன்னுரு நடுவயதில் துக்கம்

மெத்தவும் பால்ய மூப்பில் வெகு சுகவந்தனாமே .

(இ-ள்) 10 , 11 , 12 , 1 , 2 , 3 , 4 - ல் சூரியன் சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இருந்தால் தனூர் யோகம் என்னும் கார்முக யோகம் அமையும் . இத்தகைய ஜாதகர் திட சரீரம் கொண்டவராகவும் வீரனாகவும் இருப்பார் . இளம் வயதிலும் முதுமையிலும் சுகபோக வாழ்வு அமையும் . நடுவயதில் கஷ்டப்படுவார்கள்

9 - அர்த்த சந்திர யோகம்

"தனமுதலாயுள் மட்டும் சண்டனாதிபதாங் கோள்கள்

இனமுட னிருந்தாலர்த்த விந்துவின் போகமொன்று

கனசகோதரத்தைத் தொட்டு கதிராதி கோள்கள் தங்க

பனிமதியர்த்த யோகம் பகருவதி ரண்டதாமே"

"புத்திரனாதி லாடம் பொற்புறு மெழுவர் நிற்க

சித்தமாயர்த்த சந்திரன் செப்பிய யோக மூன்றாம்

சத்துரு முதவேழ் மட்டும் சண்டனாதிய வேழ்கோள்கள்

அத்தல முழையிலர்த்த வம்பு யோகம் நாலே"

"மாரக முதலேழ்கோளு மருவிட யோகமைந்து

தீரமாந்தன் மமாதி தினகரன்றங்க வாறாம்

கூருபன்னொன்று தொட்டு கொண்டி யோகமேழ

சீருலாவியந் தொட்டெண்ண செப்பிய யோகமெட்டே

(இ-ள்) இந்த யோகம் எட்டு விதமாகும் . சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , சுக்கிரன் , குரு , சனி லக்னத்திற்கு 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 - ல் இருந்தால் அர்த்த சந்திர யோகம் ஆகும் . 3 , 4 , 5 , 6,7,8 , 9 - ல் இருந்தாலும் , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 - ல் இருந்தாலும் , 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12 - ல் இருந்தாலும் , 8 , 9 , 10 , 11 , 12 , 1 , 2 - ல் இருந்தாலும் , 9 , 10 , 11 , 12 , 1 , 2 , 3 - ல் இருந்தாலும் ; 11 , 12 , 1 , 2 , 3 , 4 , 5 - ல் இருந்தாலும் ; 12,1 , 2 , 3 , 4 , 5 , 6 - ல் இருந்தாலும் அர்த்த சந்திர யோகம் ஏற்படும் .

"குலவிய சவுந்தரீயம் கொண்டிடுந் தேகத்தோடு

உலகத்திலுள்ள பேர்க்கு வுயர்வுளன் றலைவனாகி

நிலமிசை பலபேர்கட்கு நேசனா யிருப்பவன்றான்

நலமுள வர்த்த சந்திரனாடிய யோகத்தானே"

[இ-ள்] இத்தகைய அமைப்புடைய ஜாதகர் அழகான உடலும் அனைவருக்கும் உதவும் குணமும் அன்பாகப் பழகும் சுபாவமும் கொண்டிருப்பார்கள் . புகழ் பெறுவார்கள் . தலைமைப் பதவி கிட்டும் . ( ஆனால் அமரர் பி.எஸ் . ஐயர் அவர்கள் , ' ஏழு கிரகங்களும் ஏதாவது எழு வீடுகளில் பணபரம் , ஆபோக்கிலீயம் இருந்தால் , இந்த யோகம் ஏற்படும் . இது மிக மிக மோசமான யோகமாகும் என கூறுகிறார் . )

10 - கதா யோகம்

"எழுவரு முதயம் நாலிலிருந்திட கதை யோகந்தான்

பழுதிலா நாலேழ் யோகம் பத்தேழும் போகமாகும்

இழிவிலா வுதயம்பத்து மிவ்வித நாலு யோகம்

அழிவிலா தனத்தேடவாசையான் தனவான்சீலன்"

(இ-ள்) கதா யோகம் என்பது நான்கு விதமாகும் . சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இவர்கள் 1 , 4 - ல் இருந்தாலும் 4 , 7 - ல் இருந்தாலும் : 7 , 10- இருந்தாலும் , 10 , 1 - ல் இருந்தாலும் கதா யோகம் உண்டாகும் . இந்த அமைப்புடைய ஜாதகர் செல்வம் , செல்வாக்கு , சுகம் , உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாக வாழ்வார்கள்

11 - சகட யோகம்

கதிர்மதி சேப்மால் பொன்னுங் கரியவன் பளிங்குதானும்

உதயமே ழதிலே நிற்கவுரைப்பது சகடயோகம்

நிதியது சகடை தன்னால் நீள்தன மிகவுந்தேடி

பதியதில் நோயால் வாடி பாரதிலிருப்பளாமே"

(இ-ள்) சூரியன் , சந்திரன் , செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி இவர்கள் லக்கினத்திலும் எழாமிடத்திலும் இருந்தால் சகட யோகம் . எனப்படும் . இத்தகைய ஜாதகர் வாழ்க்கையி துன்பங்களையும் அவமானங்களையும் சந்தித்து வேதனையான வாழ்க்கை நடத்துவார்

12 - விஹக யோகம்

"மதிரவியார லாசான் மழைக்கோளுஞ் சனியின்னோனும்

கதிசுகம் கருமந்தங்க சொல்லுவோம் விஹக யோகம்

பதிதனிலுதித்த பாலன் பலருக்குந்தூது செல்வான்

விதியுௗன் கலகஞ்செய்வான் வீணனாய்த் திரிவான்தானே '

(இ-ள்) சூரியன் சந்திரன் செவ்வாய் , புதன் குரு சுக்கிரன் , சனி இவர்கள் 4,10 - ல் இருந்தால் விஹக யோகம் . இத்தகையோர் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் . தூது செல்வார்கள் கலகம் செய்வதில் விருப்பமுடையவர்களாகவும் இருப்பர் .

13 - வஜ்ர யோகம்

"பத்துடன் நாலிற்றீயர் பட்சமற்றிடத்தில் நல்லோர்

உத்திட வஜ்ரயோக முறுமவன் சௌர்யத்தோடும்

மத்திம வயதில் கஷ்டம் வாலிப வயோதிகத்தில்

மெத்தவுஞ் சுகமேயுற்றான் மேலவர் தனக்கு நேசன் "

(இ-ள் ) 4 , 10 - ல் பாபக்கிரகம் இருந்து , மற்ற இடங்களில் சுபர்களிருந்தால் வஜ்ர யோகம் . இத்தகைய ஜாதகர் வாலிபத்திலும் வயோதிக தாலத்திலும் சுகபோகமுடன் வாழ்வர் அனைவருக்கும் அன்புடையவராய் இருப்பர் . மத்திய வயதில் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்

14 - யவ யோகம்

"உதயமே ழதிலேதீய ருயர்சுபர் நாலிடத்தில்

பதிய மற்றிடத்தில் கோள்கள் பற்றாதிருக்க வந்தோன்

அதிபராக்கிரம வந்தனாஞ் சிறுவயதில் துக்கம்

மதிதனம் மூப்பெவ்வனம் மாசுகம் யவ யோகந்தான் "

(இ-ள்) ஜென்ம லக்னத்திலும் ஏழிலும் பாபர்களும் , நான்கு பத்தில் சுபர்களும் , மற்ற இடங்களில் கிரகங்கள் இல்லாதிருந்தால் யவ யோகம் இத்தகைய ஜாதகர் அனைவருக்கும் உதவி செய்வார் . சிறுவயதில் கஷ்டமும் , முதுமையில் சுகபோக வசதியுடனும் வாழ்வார்கள் .

15 - கமல யோகம்

"இரண்டு கண்டத்தில் நல்வோரிரண்டு கேந்திரத்திற்றீயர்

திரமுறகமல யோகம் சேயதிகுணத் தானாகி

விரவிடுபல பேருக்கும் மேவுநற் புகழுங்கீர்த்தி

சரசமுஞ் சவுக்யமுற்று தரணியி லிருப்பனாமே "

(இ-ள்) நான்கு கேந்திரங்களிலும் சுபரும் பாபரும் கலந்திருந்தால் கமல யோகம் அமையும் . இவ்வமைப்புடைய ஜாதகர் அனைவராலும் புகழப்படுவார் . நல்ல குணமுள்ளவர்கள் சுகபோக வாழ்வு அமையும் .

16 - வாபி யோகம்

"இரண்டைந்து வயபெட்டிலெழு கோளால் வாபி யோகம்

பரவுமூன் றாறொன்பாணம் பனிரண்டில் வபி யோகம்

திறமுறு சுகவானற் பதிரவியும் நிசேஷபிட்டான்

உறவினர் மற்றோர்க்கீயா வுலோபியா யிருப்பனாமே '

(இ-ள்) சுபரும் பாபரும் இணைந்து 2 , 5 , 8 , 11 ஆகிய பணபர ஸ்தானங்களில் இருந்தால் வாபி யோகம் . 1 , 3,6,9,12 ஆகிய ஆபோக்கிலியத்தில் சுபரும் பாபரும் கலந்து இருந்தாலும் வாபி யோகம் . இத்தகைய ஜாதகர் அதிகம் செல்வம் சேர்ப்பார்கள் அதிகம் செலவுகளும் செய்வார்கள் . சுகவாழ்வு அமையும் . ஆனால் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள்.

( பணபர ஸ்தானங்களிலோ அல்லது ஆபோக் கி லீயத்திலோ தனித்தனியாக இருக்க வேண்டும் . இரண்டு ஸ்தானங்களில் கலந்து இருந்தால் வாபி யோகம் ஏற்படாது . )

17 - மூல யோகம்

"பத்துட னாறிரண்டில் பகருமேழ் கோளிருக்க

உத்திடுங்கல போஹந்தா னோங்கு மூன்றேழி லாடம்

சித்தியா யோகம் ரெண்டு செப்பு நாலெட்டீராறும்

பந்தியா மூன்றாமி யோகம் பயிர்த்தொழில் செய்வான்றானே '

(இ-ள்) சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இவர்கள் 2 , 6 , 10 - ல் இருப்பின் மூல யோகம் . 1,3,7 , 11 - ல் இருந்தாலும் , 4 , 8 , 12 - ல் இருந்தாலும் ஹல யோகம்தான் . இத்தகைய ஜாதகர் பெரிய நிலச்சுவான்தார்களாகவும் எஸ்டேட் உரிமையாளர்களாகவும் பயிர்த் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள் .

18 - சிருங்காட யோகம்

"ஒன்பதஞ் சுதயமென்று வுரைக்குந் திரிகோணந்தன்னில்

இன்புறு எழுகோள் நிற்க வெழில் சிருங்காட யோகம்

துன்பமு மிகவுமுள்ளோன் சுகமது வயோதிகத்தில்

அன்பொடு வெகுநாளிந்த வவனியி லிருப்பதாமே "

(இ-ள்) சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இவர்கள் 1,5,9 ல் இருந்தால் சிருங்காட யோகம் அமையும் . இத்தகைய ஜாதகருக்கு இளம் வயதில் கஷ்டம் ஏற்படும் முதுமைக் காலத்தில் சுகபோகமுடன் வாழ்வார்கள் .

19 - சக்கர யோகம் !

ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்), 3, 5,7,9,11 ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக் கொடுக்கும். பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். கிராம அதிகாரி அல்லது பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர்களின் பலம் பலவீனம் ஏற்படுத்தும்.

20 - சமுத்ர யோகம்

இரட்டைப்படை ராசிகளான 2,4,6,8,10 , 12 - ல் சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் , சனி இருந்தால் சமுத்ர யோகம் ஏற்படும் இத்தகைய ஜாதகருக்கு உயர்பதவி , முக்கிய தலைவர் பொறுப்பு , உயர் அந்தஸ்து போன்றவை ஏற்படும் . இனிமையான குரல் வளம் அமையும் .

சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்